
மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமைப் பதிவாளர் & மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம், அனைத்து மாநிலங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், வரவிருக்கும் 2027 – ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்கூட்டிய சோதனை நடவடிக்கைகளைத் தொடங்குவதாக அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில், இதற்கான பயிற்சி 2 கிராமப்புற பயிற்சிகள் மற்றும் 1 நகர்ப்புற பயிற்சி என மொத்தம் 3 பகுதிகளாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம், மாநில அரசுடன் கலந்தாலோசித்து, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா (கிராமம்), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுகா (கிராமம்) மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சி (நகர்ப்புறம்) ஆகிய பகுதிகள் இந்த முன்கூட்டிய சோதனைக்கான பயிற்சியை செயல்படுத்த அடையாளம் காணப்பட்டுள்ளது.
முதல் முறையாக, பயிற்சிக்கான பகுதிகளை தேர்ந்தெடுப்பதில், தரவு சேகரிப்பு, டிஜிட்டல் தள அமைப்பு வரைபடங்களைத் தயாரிப்பதற்கு மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன. மக்கள் தொகை கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு இணையதளம் வாயிலாக அனைத்து நடவடிக்கைகளும் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படுகின்றன. இது நிகழ்நேர மேற்பார்வை மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக வலைதளமாகும்.
இந்த இணையதளத்தில், வீடுகள் குறித்த தகவல்கள் அடங்கிய பட்டியல் தொகுதிகளை உருவாக்குதல், களப் பணியாளர்களின் (கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள்) செயல்பாடுகளை ஒழுங்கமைத்தல், வீட்டுப் பட்டியளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்தல் போன்ற அனைத்து ஆயத்தப் பணிகள் அனைத்தும், மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் மற்றும் மாநில துறை சார்ந்த அதிகாரியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.
தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பகுதிகளிலும் உள்ள அனைத்து களப் பணியாளர்களுக்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து 03-11-2025 முதல் 07-11-2025 வரை மூன்று நாள் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் கணக்கெடுப்பு தொடர்பான கருத்துக்கள், நடைமுறைகள், கேள்வித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
டிஜிட்டல் லேஅவுட் மேப் மொபைல் செயலியைப் பயன்படுத்தி வீட்டுப் பட்டியல் தொகுதி எல்லைகளை மேற்பார்வையாளர்கள் டிஜிட்டல் முறையில் வரையறுப்பதன் மூலம், முன் சோதனை கள செயல்பாடுகள் நவம்பர் 10, 2025 அன்று தொடங்கியது. அதன்பிறகு, கணக்கெடுப்பாளர்கள் தங்கள் வீட்டுப் பட்டியல் தொகுதியில் உள்ள அனைத்து கட்டிடங்களின் புவிசார் குறியிடல் பணிகளை மேற்கொண்டு, நவம்பர் 14, 2025 அன்று அனைத்து பணிகளையும் நிறைவு செய்தனர். கல்வி, வருவாய், துப்புரவு, சுகாதாரம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற துறைகளைச் சேர்ந்த மாநில அரசு அதிகாரிகள் இந்தக் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து முதற்கட்டப் பணிகளும் முடிந்த பிறகு, வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் 15-11-2025 அன்று தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து களப்பணியாளர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுப் பட்டியல் தொகுதிக்குள் 30-11-2025 வரை நேரடியாக வீடுகளுக்குச் சென்று, வீட்டின் தலைவர், வீட்டின் நிலைமைகள், கிடைக்கும் வசதிகள், வீட்டின் விவரங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்த 34 கேள்விகள் அடங்கிய கேள்வித்தாளை வீட்டுப் பட்டியல் செயல்பாடுகளுக்கான மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தி தரவுகளை சேகரிப்பார்கள்.