சென்னை:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சியாக இருக்கும்போது மதுக்கடைகளின் எண்ணிக்கையினை குறைக்க வேண்டும், மதுக்கடைகளின் நேரத்தை குறைக்க வேண்டும் என்று கூறிய தி.மு.க. 2016ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் இப்போது மதுக்கடைகளை காலை 7 மணி முதலே திறக்க யோசித்துக் கொண்டிருப்பதாக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கூறியிருப்பது தி.மு.க.வின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
மது விலக்குத் துறை என்றாலே, மதுவை படிப்படியாக ஒழிப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதுதான். ஆனால், தி.மு.க. அரசோ மதுவை ஊக்குவிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. மக்கள் மது குடிப்பதை நிறுத்துவதன்மூலம் டாஸ்மாக் வருமானம் குறைந்தால் பிரச்சனை இல்லை என்று சொல்லும் மாண்புமிகு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர், மது அருந்துபவர்களில் நாற்பது விழுக்காட்டினரின் நலனுக்காக 90 மி.லி. மது பாக்கெட் அறிமுகம் செய்வது, காலை 7- -மணியிலிருந்து 9-மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டுமென்ற கடினமான பணி செய்யும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலிப்பது முதலானவை குறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக பேட்டி அளித்திருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, காலை 7-மணிக்கே மதுக்கடைகளை திறப்பது என்ற யோசனையை கைவிடவேண்டுமென்றும், படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






