சிதம்பரம் நடராசர் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு அரசானை நடைமுறையில் உள்ள நிலையில் கனக சபை மேடையில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்தி தீட்சிதர்கள் தன்னிச்சையாக பதாகை வைத்தது சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தெய்வத் தமிழ்ப் பேரவையினர் சிவனடியார்களுடன் 28.06.2023 அன்று காலை கணகசபை மேடையில் தேவாரம் திருவாசம் ஓதி வழிபடுவதாக அறிவித்திருந்தனர்.
இதன் காரணமாக கோவிலில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் சிவனடியார்கள் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நகர ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இதன்படி காலை 10.00 மணிக்கு சிதம்பரம் கீழ சன்னதி வழியாக தேவாரம் திருவாசகம் ஓதி சிவ வாத்தியங்களுடன் தெய்வத்தமிழ்ப் பேரவை சார்ந்த வே.சுப்ரமணிய சிவா, வேந்தன் சுரேசு, எல்லாளன், மார்த்தாண்டம், சக்திவேல் உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்டவர்கள் கோவிலுக்கு சென்றனர். பின்னர் காவல்துறை பாதுகாப்போடு கனக சபை மேடையில் நின்று தேவாரம் திருவாசகம் பாடினர். அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் தரிசனம் மட்டுமே செய்ய வேண்டும் இங்கு பாடகூடாது வேண்டுமானால் மனதிற்குள்ளேயே பாடுங்கள் என சிவனடியார்களை தடுத்தனர்.
சிவனடியார்கள் தேவர திருவாசக பதிகங்கள் பாடியபடியே வழிபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் மேலும் இது குறித்து தெய்வத்தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் முனைவர் சுப்பிரமணிய சிவா கூறியதாவது : ”தீட்சிதர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டுவருவதும், சிவ பக்தர்களை தாக்குவதும் தகாத வார்த்தைகளால் ஏசுவதும் தொடர்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு வழக்குகள் பதியப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். தாக்குதல், மற்றும் தீண்டாமை வழக்குகள் போடப்பட்டவர்கள் சுதந்திரமாக நடந்துவருவது மேலும் அவர்களுக்கு பக்தர்களை தாக்குவதற்கு துணிச்சலை தருகிறது எனவே வழக்குகள் பதிவதோடு மட்டுமல்லாமல் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். சிதம்பரம் நடராசர் கோயில் தமிழக அரசே ஏற்று நடத்த தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றார்”.








